கிறிஸ்தவம்

   கடவுளைப் பற்றிய சரியான நம்பிக்கைகளை வழங்கும் கிறிஸ்தவமே உண்மை சமயம் ஆகும். இது வாழ்வின் நோக்கத்தை பின்வருமாறு கற்பிக்கிறது: "கடவுளைத் தேடி அவரை அறிய வேண்டும், கடவுளை அறிந்து அவரை அன்புசெய்ய வேண்டும், கடவுளை அன்புசெய்து அவரை அடைய வேண்டும்." உலக வரலாற்றில் செயலாற்றும் இஸ்ரயேலின் கடவுளே உண்மை கடவுள் ஆவார். அவர் யாவே என்ற மறை பொருளான தமது பெயரை மோசேக்கு வெளிப்படுத்தினார் [விடுதலைப்பயணம் 3:14]; எப்பொழுதும் இருக்கிறவர் அவரே என்பதே அதன் பொருள். கடவுளின் இரண்டாம் ஆளாகிய இறைமகன் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டின் இறைவாக்குகளை நிறைவேற்றி, உலகத்தைப் பாவங்களிலிருந்து மீட்க மக்களின் விருப்பப்படி உலகில் தோன்றினார். இந்த அன்புச் செயலே, பைபிளின் கடவுளே உண்மையாக வாழும் கடவுள் என்பதை நிரூபிக்கிறது.
   "பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்." (எபிரேயர் 1:1-3)
   "உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார். கிறிஸ்து உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடு களைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. பழிக்கப்பட்ட போது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாய மாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்." (1 பேதுரு 1:20-21,2:21-24)
   "அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்க ளுக்கு கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது. அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்." (1 யோவான் 4:7-12)
   "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத் தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளை களாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார். இதுவே அவரது விருப்பம்: இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்: இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின் படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன் குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம்." (எபேசியர் 1:3-11)
 மேலும் அறிய, வாசியுங்கள்: இறைவாக்குகள்